தவெக ஆட்சியை சதி செய்து கவிழ்க்க முயன்றதாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் ஜூலை 6ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த வழக்கில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (45) நடத்தும் ஐ.பி.டி.எஸ். என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் தொடர்பாகவும், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் (45), சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் (40) ஆகியோரும் தவெக எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

தொடர் விசாரணையில், இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தவெக ஆட்சியை கவிழ்க்க 180 கோடி ரூபாய் அளவில் பேரம் பேசப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

ஜூலை 6ம் தேதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு வழங்கப்பட்ட சம்மன், செந்தில் பாலாஜி வீட்டில் அவரது தந்தை வேலுச்சாமி மூலம் இன்று பெறப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.