சிவகங்கை: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில், ‘எம் லிஸ்ட்’ என்ற பெயரில் எந்த காலியிடமும் மறைக்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். காலியிடங்கள் அனைத்தும் ஆன்லைனில் வெளிப்படையாக காட்டப்படுவதால், இந்த நடைமுறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடக்க கல்வித்துறையின் கீழ் நடைபெறும் இந்த கவுன்சிலிங் ஜூலை 3-ல் தொடங்கி ஜூலை 16 வரை நடைபெறுகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், ஒன்றியத்திற்குள் என பல்வேறு வகை இடமாற்றங்கள் இதில் இடம்பெறுகின்றன.

முந்தைய காலங்களில் முக்கிய நகரங்கள் அல்லது பிரதான சாலையோர பள்ளிகளில் பணியிடங்களைப் பெற சிலர் சிபாரிசு தேடுவதாகவும், அத்தகைய விருப்பமான காலியிடங்கள் ஆன்லைன் பட்டியலில் காட்டப்படாமல் ‘எம் (மினிஸ்டர்) லிஸ்ட்’ என அழைக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் கூறினர்.

இந்த முறை எந்த இடமும் மறைக்கப்படாமல் அனைத்தும் பட்டியலில் காட்டப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும், கவுன்சிலிங்கில் பங்கேற்கும் ஆசிரியர்கள் கட்டாயமாக தற்செயல் (சி.எல்.,) விடுப்பில் தான் செல்ல வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் தேவையற்ற கூட்டம் குறைந்து, கூட்ட அரங்குகளில் சர்ச்சைகள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இடமாறுதல் தேவைப்படும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்பதால் நடைமுறை சீராகும் என்றும் அவர்கள் கூறினர்.