மதுரை திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை மீண்டும் அளவீடு செய்ய, அரசு தரப்பு கேட்ட அவகாசத்தை மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கியுள்ளது. முன்பு மேற்கொண்ட அளவீட்டில் சில இடங்களில் மாறுபாடுகள் இருப்பதாக அரசு தெரிவித்தது.

இந்த வழக்கு, ரமேஷ் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து எழுந்தது. மலையில் உள்ள சமண கோயில்கள் மற்றும் பின்புறத்தில் உள்ள தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடவரை கோயிலை பாதுகாக்க வேண்டும் என்றும், முழு மலையையும் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கோரினார். மேலும், தொல்லியல்துறையின் அனுமதியுடன் மட்டுமே மலையில் செல்ல அனுமதிக்க வேண்டும், மலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் இடிபாடுகளை அகற்ற வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன், 2025 பிப்.19 அன்று இரு நீதிபதிகள் அமர்வு, மத்திய கலாசாரத்துறை செயலர் மற்றும் மத்திய தொல்லியல்துறை இயக்குனருக்கு புதிய மனு அளிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய வாய்ப்பளித்த பின் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, மத்திய கலாசாரத்துறை செயலர் விவேக் அகர்வால் மற்றும் மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ராம்ஜி நிகாம், யதுபீர் சிங் ராவத் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுதாரர் முன்வந்தார்.

ஏப்.8 அன்று வெளியான உத்தரவின் படி, மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் மலைப் பகுதியை அளவீடு செய்து, பணி முடிந்ததும் அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நேற்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மறு அளவீட்டுக்கு அவகாசம் தேவை என அரசு தரப்பு தெரிவித்தது.

மேலும், பிரிவி கவுன்சிலின் உத்தரவுக்குப் பிறகு மலையில் ஏதேனும் விரிவாக்கப் பணிகள் நடந்திருந்தால், அதற்கான விவரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு ஆக.14க்கு ஒத்திவைக்கப்பட்டது.