சென்னை: தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்களில் உள்ள அறங்காவலர் பதவிகளைப் பெற ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறநிலையத்துறை (HR&CE) சமீபத்தில், 214 முக்கிய கோவில்கள் மற்றும் 27 சிறப்பு நிர்வாகத் திட்ட கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அறங்காவலர் பதவி ஆன்மிகப் பொறுப்புடன் சமூக அந்தஸ்தையும் தரும் ஒன்றாக பார்க்கப்படுவதால், உள்ளூர் நிலை நிர்வாகிகள் முதல் மாவட்ட அளவிலான வி.ஐ.பி.க்கள் வரை பலரும் இதில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் உள்ள ‘ஏ கிரேடு’ கோவில்களில் அறங்காவலராக நியமனம் கிடைத்தால், வட்டார அரசியல் செல்வாக்கும் கவுரவமும் அதிகரிக்கும் என்ற பார்வை காரணமாக கவனம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விதிமுறைகளின்படி விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டாலும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவிகளை பெற்றுத் தர தனிப் பட்டியல் தயாராகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அறங்காவலர் குழுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய பெண் உறுப்பினர் மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஆகியோரை ஆளுங்கட்சி நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து ஆன்மிக அன்பர்கள், விண்ணப்பிப்பவர்களுக்கு உண்மையான ஆன்மிக நாட்டம் இருக்க வேண்டும்; குற்றப் பின்னணி இருக்கக் கூடாது என்ற விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அரசியல் காரணங்களால் மட்டும் இடங்கள் நிரப்பப்பட்டால் கோவில்களின் துாய்மையும் ஆன்மிக மாண்பும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்து, தகுதியான உண்மையான பக்தர்களை மட்டுமே அரசு தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.