சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தங்கள் அணிக்குள் கொண்டு வர த.வெ.க. முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக, கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து வருபவர்களுக்கு த.வெ.க.வில் பெரிய பதவிகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
த.வெ.க. தலைமையின் வழிகாட்டுதலின் கீழ், அ.தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை வாரந்தோறும் அழைத்து வந்து கட்சியில் இணைக்கும் பணிகள் நடைபெறுவதாக தகவல். இதற்கான இணைப்பு நிகழ்ச்சிகள் சென்னையில் சனிக்கிழமைகளில் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
காலியாக உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் சுமார் 90 சதவீதம் அளவுக்கு த.வெ.க.வில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.
அ.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகளை இழுத்து வருபவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவி, த.வெ.க. மாநிலப் பதவி, மாவட்டச் செயலர் பதவி உள்ளிட்ட பல்வேறு ‘ஆஃபர்கள்’ வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உத்தரவாதங்கள் ஏற்கனவே த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் வழியாக தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்.
இதன் தொடர்ச்சியாக, பல மாவட்டங்களில் அ.தி.மு.க. முக்கிய புள்ளிகளை இணைக்கவும், அந்தந்த மாவட்டங்களில் பிரமாண்டமான இணைப்பு விழாக்களை நடத்தவும் முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியில் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி சில ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.க்களும் இலக்காக உள்ளதாகவும் கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.





