ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்புகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் பாகிஸ்தான் தளமுடைய 23 நபர்களை சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (உபா) கீழ் “பயங்கரவாதிகள்” என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது. ஆட்சேர்ப்பு, ஊடுருவல், பயிற்சி, ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்டவர்களில் மூவர், லஷ்கர் நிறுவனர் ஹபீஸ் முஹம்மது சயீத்தின் நெருங்கிய கூட்டாளிகள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், 2016-ம் ஆண்டு நக்ரோட்டா ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில் மூவர் தொடர்புடையவர்கள் என்றும், 2018-ம் ஆண்டு சுன்ஜ்வான் ராணுவ முகாம் தாக்குதலில் இருவர் தொடர்புடையவர்கள் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.





