தமிழகத்தில் “ஊழல் பெருச்சாளி” திமுகதான் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். அதே நேரத்தில், முதல்வர் விஜய் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, புதுச்சேரியின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் பலமுறை வலியுறுத்தியதாகவும் கூறினார். பிரான்ஸ் நாட்டின் தொடர்பு இன்றும் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதல்வர் விஜயை விமர்சித்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், “வினை விதைத்தவன் வினையறுப்பான்” என்பதை அது காட்டுகிறது என வைகோ கூறினார். கட்சி மாறும் போது பழைய கட்சியை விமர்சிப்பது பல கட்சிகளிலும் நடக்கும் ஒன்றாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. வெளியே வந்த பிறகு, தொண்டர்களிடம் ஏற்பட்ட பெருமூச்சின் வெளிப்பாடுதான் துரை வைகோ எம்.பி.யின் கருத்து எனவும் வைகோ விளக்கினார். கூட்டணியில் இருந்தபோது நல்ல காரியங்களை பாராட்டியதாகவும், அவமானப்படுத்தப்பட்ட நேரங்களில் தாங்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், விஜய் பா.ஜ.க. எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளார் என்றும், தமிழகத்தில் முதல்வர் விஜய் நேர்மையான நிர்வாகத்தை வழங்குகிறார் என்றும் வைகோ மீண்டும் வலியுறுத்தினார்.