திருப்பூரில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் தானியங்கி போக்குவரத்து சிக்னல்களை அமைக்கும் திட்டம் குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், தொழில்நுட்பம் மட்டும் போக்குவரத்து நெரிசலை குறைக்காது; வாகன ஓட்டுநர்களிடம் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வும் கட்டுப்பாடும் முதலில் வலுப்பெற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

பின்னலாடைத் தொழிலுக்குத் தேவையான நூல், துணி மற்றும் ஆயத்த ஆடைகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் நகருக்குள் தொடர்ந்து இயக்கப்படுவதால் போக்குவரத்து அழுத்தம் அதிகரித்து வருகிறது. அவிநாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் அதிவேகப் பயணம் மற்றும் ‘ஷிப்ட்’ பணிக்குச் செல்லும் தொழிலாளர்களின் அவசரப் பயணம் விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகிறது.

ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரிகள் கூறுவதாவது: குறுகலான சாலைகள், சாலை ஓரங்களில் சரக்கு ஏற்றம்–இறக்கம், போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாத வணிக வளாகங்கள், சாலையோர வாகன நிறுத்தம், பேருந்துகளை ஒழுங்கின்றி நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவது போன்றவை தானியங்கி சிக்னல் அமைப்புகளின் செயல்திறனுக்கு பெரிய சவால்களாக உள்ளன.

அதனால், முதற்கட்டமாக அகலமான மற்றும் அதிக நெரிசல் உள்ள பகுதிகளில் சோதனை முறையில் ஏஐ சிக்னல்களை செயல்படுத்தலாம் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர். அவிநாசி, பல்லடம், காங்கயம் சாலைகள் மற்றும் புஷ்பா தியேட்டர் சந்திப்பு போன்ற இடங்கள் இதற்கான தொடக்கப் பகுதிகளாக குறிப்பிடப்படுகின்றன. இதனுடன் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாலைகளை அகலப்படுத்துதல், பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், வாகன நிறுத்துமிடம் இல்லாத வணிகக் கட்டடங்களுக்கு அனுமதி வழங்காதது போன்ற நடவடிக்கைகளும் அவசியம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘சாலை பாதுகாப்புக் குழு’ கூட்டங்களில் களத்தில் பணியாற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.க்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் இணைத்து முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் உள்ள திருப்பூரில், ஏஐ அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மையை இணைப்பது நடைமுறையில் எளிதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.