உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவிலில், உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணியின்போது திருட்டு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீ பத்ரிநாத்–கேதார்நாத் கோவில் கமிட்டி முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணியின்போது திருட்டு நடந்ததாக கூறப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கவனம் பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து பத்ரிநாத் கோவிலிலும் இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு தாம்களுக்கு செல்லும் சார்தாம் யாத்திரை நடைபெற்று வரும் சூழலில், பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 10,279 அடி உயரத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களில், காணிக்கை எண்ணும் பணியில் இருந்த சில ஊழியர்கள் பணத்தை திருடியதாக கூறப்பட்டது. பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு முதன்மை செயல் அதிகாரி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கமிட்டி தெரிவித்துள்ளது.

கமிட்டி தலைவர் ஹேமந்த் திவேதி, புகாரை நிர்வாகம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், தவறு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ‘பை ரவ் சேனா’ என்ற ஹிந்து அமைப்பின் நிறுவன தலைவர் சந்தீப் கத்ரி, ஜூலை 3 அன்று கோவில் நிர்வாகத்திற்கு புகார் கடிதம் அனுப்பியதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.