1967ல் தனி தமிழகம் குறித்து கூறப்பட்ட பேச்சை பதிவு செய்த புத்தகத்தை முன்னிட்டு பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இளங்கோவன் எழுதிய “தமிழ் தேசிய தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்” என்ற புத்தகம் 2014ல் சென்னை வடபழனியில் வெளியிடப்பட்டது. அதில், 1967ல் கோவையில் தமிழரசன் பேசியதாகக் கூறப்படும் “தமிழகம் தனி நாடாக வேண்டும்” என்ற கருத்தும், பிரிவினைக்காக கொரில்லா போர் முறை பயன்படுத்த வேண்டும் என்பதுபோன்ற குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து, ‘கழகம்’ பதிப்பகத்தை நடத்திய இளங்கோவன், சென்னை கே.கே.நகரை சேர்ந்த கீரா மற்றும் சாலிகிராமத்தை சேர்ந்த தமிழ் பாலா ஆகியோர் மீது போலீசார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

வழக்கை ரத்து செய்யக் கோரி கீரா மற்றும் தமிழ் பாலா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். விசாரணை நடைபெறும் போது இளங்கோவன் உயிரிழந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சட்டப்படி அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பு, அவமதிப்பு அல்லது அதிருப்தியை உருவாக்கும் எழுத்து/அடையாள வடிவிலான செயல்பாடுகளே தேசத் துரோகத்தின் சாராம்சம் என்றும், இத்தகைய குற்றச்சாட்டுகளை இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்பவே மதிப்பிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 1967 காலகட்டத்தில் இத்தகைய பேச்சு அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டியிருக்கலாம் என்றாலும், இன்றைய சூழலில் இந்தியா ஒருங்கிணைந்த தேசமாக இருப்பதாகவும், தற்போது யாராவது “தமிழகம் தனி நாடாகப் பிரிய வேண்டும்” என்று பேசினால் பொதுமக்கள் அதை வெறுப்பைத் தூண்டும் உரையாக அல்லாமல் மனநலக் கோளாறு உள்ளவரின் பேச்சாகவே கருதுவர் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. புத்தகத்தில் தற்காலத்தில் பிரிவினைக்கான அழைப்பு எதுவும் இல்லை; பல தசாப்தங்களுக்கு முன் கூறப்பட்டதை மட்டும் பதிவு செய்துள்ளது என்பதால், நடந்ததை பதிவு செய்வது வெறுப்பைத் தூண்டும் முயற்சியாகாது எனக் கூறி வழக்கை ரத்து செய்தது.