லக்னோ: 2027 சட்டசபை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தேஜ) மிகப்பெரிய பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் அவர் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக லக்னோவில் கட்சிப் பொறுப்பாளர்களை சந்தித்ததுடன், தேஜ கூட்டணிக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி தேர்தல் செயல் திட்டத்தை வகுத்தார்.
சந்திப்புகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2027ல் தேஜ கூட்டணிக்கு “மாபெரும் வெற்றி” கிடைக்கும் என்றார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெளிப்படுத்திய சேவை மனப்பான்மை இதற்கு ஆதாரமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், தேர்தல் களத்திற்கு பாஜ முழுமையாக தயாராக இருப்பதாகவும், உத்தரப் பிரதேசத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 2027ல் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற தனது நம்பிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.





