நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள் அபரிமிதமாக இருந்தாலும், கடுமையான விதிமுறைகள், நடைமுறை சிக்கல்கள் மற்றும் முடிவெடுப்பதில் தாமதம் காரணமாக சுற்றுலா துறை எதிர்பார்த்த அளவுக்கு வளரவில்லை என நிடி ஆயோக் தெரிவித்துள்ளது. சுற்றுலாவை லாபகரமான வளர்ச்சி துறையாக மாற்ற அனுமதி நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
“சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வெளிக்கொண்டு வருதல்” என்ற தலைப்பில் நிடி ஆயோக் 104 பக்க அறிக்கையை வெளியிட்டது. அறிக்கை வெளியீட்டில் பேசிய மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஒரு ஹோட்டலை தொடங்க 30 முதல் 35 வரை உரிமங்கள், தடையில்லா சான்றிதழ்கள் மற்றும் அனுமதிகள் தேவைப்படுவதால், பல கோடி முதலீட்டுக்குப் பிறகும் செயல்பாட்டை உடனடியாக தொடங்க முடியாமல் முதலீட்டாளர்கள் ஆர்வம் இழக்கிறார்கள் என்றார்.
அறிக்கையில், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ஆரம்பகட்ட “திட்ட நிலை அனுமதி” முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகம், சலவை, அழகு நிலையம் போன்ற ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக உரிமம் பெறும் முறையை நீக்கி, முழு வளாகத்திற்கும் ஒரே சுகாதார-வர்த்தக உரிமம் வழங்கும் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரே ஹோட்டல் வளாகத்தில் பல பகுதிகளில் மதுபானம் பரிமாற தனித்தனி உரிமங்கள் கேட்பதற்கு பதிலாக ஒரே மதுபான உரிமம் வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ‘ஹோம்ஸ்டே’ தங்கும் விடுதிகளுக்கான விதிகளை தளர்த்தி, தற்போதைய ஆறு அறைகள் என்ற உச்சவரம்பை ஒன்பது அறைகளாக உயர்த்த வேண்டும்; பதிவு செய்யும் போது உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதியையும் நீக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதர பரிந்துரைகளில், வெளிமாநில வாகனங்கள் 60 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் மீண்டும் வரி செலுத்த வேண்டிய விதியை தளர்த்த வேண்டும் என்றும், சில மாநிலங்களில் சுற்றுலா முகவராக பதிவு செய்ய விதிக்கப்படும் குறைந்தபட்ச மூலதன வரம்பு மற்றும் கல்வித் தகுதி நிபந்தனைகளை நீக்க வேண்டும் என்றும் நிடி ஆயோக் தெரிவித்துள்ளது.





