பீஹாரின் பாங்கிபூர் சட்டசபை இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் போட்டியிட உள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் பாரதி அறிவித்துள்ளார்.
பீஹார், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீஹாரில் பாங்கிபூர் தொகுதி, கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற பாஜ தலைவர் நிதின் நபின் ராஜ்யசபா எம்பியாக தேர்வானதைத் தொடர்ந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் காலியானது.
முந்தைய பீஹார் சட்டசபைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக பாங்கிபூர் தொகுதி பாஜவின் கோட்டையாக கருதப்படுகிறது. பாஜ இன்னும் அதிகாரப்பூர்வ வேட்பாளரை அறிவிக்காத நிலையில், அஜய் அலோக், நீல் ரத்தன் கோஷ், அஜீத் குமார் லாலி ஆகிய பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





