சண்டிகர்: முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி செய்யும் பஞ்சாபில், 2027 பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் மீண்டும் பலம் பெற வேண்டும் என காங்கிரஸ் தலைமை வலியுறுத்தி வருகிறது.
இந்த சூழலில், பஞ்சாப் காங்கிரஸ் மாநிலத் தலைவராக அம்ரிந்தர் சிங் வாரிங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 முதல் அந்தப் பதவியில் உள்ள அவரை மீண்டும் தொடர வைத்தது, கட்சியின் சில தலைவர்களுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி.வும் முன்னாள் துணை முதல்வருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிற கட்சித் தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என்ற பேச்சுகள் உள்ள நிலையில், இந்த சந்திப்பு சந்தேகங்களை அதிகரித்துள்ளது.
‘பஞ்சாப் பாதுகாப்பு தொடர்பாக மட்டுமே பேசினேன்; அரசியல் குறித்து எதுவும் இல்லை’ என ரந்தாவா விளக்கம் அளித்தாலும், கட்சிக்குள் பலர் அதை ஏற்க தயங்குகின்றனர். இதே நேரத்தில், சமீப காலமாக ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் காங்கிரஸ் எம்.பி.வும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணீஷ் திவாரி, மாநில அமைப்பில் ஓரம் கட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரும் அமித் ஷாவை சந்தித்ததாகவும் பேச்சு நிலவுகிறது.
மேலும், பிரசாரக் குழுத் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான சரண்ஜித் சிங் சன்னிக்கும் வாரிங்கின் மீள் நியமனம் பிடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சில எம்.பி.க்கள் ராஜினாமா செய்யக்கூடும் என்ற அச்சமும் கட்சித் தொண்டர்களிடையே பேசப்படுகிறது; தேர்தலுக்கு முன்பே உட்கட்சி பிளவு தீவிரமாகும் அபாயம் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.





