சென்னை: தி.மு.க.க்கு “புதிய பாதை” அமைப்பது அவசியம் என, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், தி.மு.க. வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்தாலும், வெற்றியால் தலைக்கனம் கொள்ளாமல், தோல்வியால் மனம் உடையாமல் மீண்டெழும் இயக்கம் என அவர் கூறினார். இதை அவர் பீனிக்ஸ் பறவையின் மீளெழுச்சியுடன் ஒப்பிட்டார்.

சில இயக்கங்கள் ஒரு தோல்வியையே தாங்க முடியாமல் தளர்வதாகவும், ஆனால் கொள்கை உறவால் வளர்ந்த தி.மு.க. ஒரு குடும்பமாக வேரூன்றி நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த பல ஆண்டுகளுக்கான பயணத் திசையை தீர்மானித்து, தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி புதிய பாதையை அமைப்பது தலைமைத் தொண்டனான தனது கடமை என்றும் தெரிவித்தார்.

இதற்காக 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்து தொகுதி வாரியாகச் சென்று தொண்டர்களின் கருத்துகளை அறியச் சொன்னதாகவும், “உடன்பிறப்பின் குரல்” என்ற இணையதளத்தையும் உருவாக்கியதாகவும் அவர் கூறினார். தொண்டர்களின் எண்ணங்களின் அடிப்படையில் கட்சியை மறு கட்டுமானம் செய்ய, இளமையும் அனுபவமும் கலந்த மறுசீரமைப்பு ஆலோசனை குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அமைப்பு ரீதியான பலத்தில் தி.மு.க.க்கு இணையான கட்சி இந்தியாவில் இல்லை என்பதை மற்ற கட்சியினரும் ஒப்புக்கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.