ஹைதராபாத்: பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட கட்சிக்குள் சிக்கல்களைத் தொடர்ந்து, தெலுங்கானாவிலும் காங்கிரசில் புதிய சலசலப்பு உருவாகியுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தாலும், கட்சிக்குள் குழப்பம் தொடர்கிறது.

முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக உள்ள கோண்டா சுரேகா, கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வெளிநாடு பயணத்தில் இருந்த அவர், கூட்டம் நடைபெறும் தினத்திற்கு முன்தினமே ஹைதராபாத் திரும்பியிருந்தும் கூட்டத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் கட்சிக்குள், முதல்வருடன் ஏற்பட்ட முரண்பாடே காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கான காரணமாக, ஹைதராபாதிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் உள்ள, லட்சுமி நரசிம்ம ஸ்வாமி எழுந்தருளியுள்ள யாதகிரிகுட்டா எனப்படும் 1,000 ஆண்டுகள் பழமையான குகைக்கோவில் தொடர்பான அறக்கட்டளை நியமன விவகாரம் குறிப்பிடப்படுகிறது.

அறக்கட்டளைக்கு சிலரை நியமிக்குமாறு முதல்வருக்கு அமைச்சர் சுரேகா கடிதம் எழுதியிருந்ததாகவும், ஆனால் துறை அமைச்சரை ஆலோசிக்காமல் முதல்வர் தன் விருப்பப்படி நியமனங்கள் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அமைச்சர், அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்ததாக கட்சிக்குள் பேசப்படுகிறது.

மேலும், அதே அறக்கட்டளைக்கு ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரிந்துரைத்த பெயர்களையும் முதல்வர் நிராகரித்ததாக கூறப்படுவதால், அவரும் அதிருப்தியில் உள்ளாராம். ஆனால் முதல்வர் தரப்பு, இது பெரிய பிரச்னை அல்ல; அரசியலில் இத்தகைய விஷயங்கள் இயல்பானவை எனக் கூறி விவகாரத்தை சிறிதாகக் காட்டுகிறது.