சென்னையில் தவெக ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசுவின் கார் டிரைவர் கிருஷ்ணாவை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (45) ‘ஐபிடிஎஸ்’ என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் (45), மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் (40) ஆகியோருடன் சேர்ந்து தவெக எம்எல்ஏக்களை இழுக்க ஊக்கத்தொகை உள்ளிட்ட பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக திருநாவுக்கரசு உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.

தொடர் விசாரணையில், இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அசோக்குமார் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.