விசிக தலைவர் தொல். திருமாவளவன், அதிமுகவில் தற்போது என்ன நடக்கிறது என்பதையும், அதுகுறித்து அந்தக் கட்சி தலைவர்கள் ஏன் வெளிப்படையாக பேசாமல் இருக்கிறார்கள் என்பதையும் கேள்வியாக முன்வைத்தார். சென்னை செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் இதுவரை தெளிவான கருத்து தெரிவிக்கவில்லை என்றார்.
மேலும், அதிமுக தலைமையிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இடையில் உள்ள எங்களைப் போன்றோரிடம் தொடர்ந்து கேட்பது பயனில்லை என ஊடகங்களை அவர் விமர்சித்தார். அதிமுகவை முழுமையாக ‘தவெக’வில் இணைப்போம் என தவெக தரப்பில் கூறப்படுகிறதெனில், அது சரியா, ஜனநாயகமா, அரசியல் அறமா என்று அவர்களிடமே கேட்க வேண்டும் என்றார்.
‘குதிரை பேரம்’ தொடர்பான புகார் உண்மையாக இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கவர்னருக்கு அதிகாரம் இருந்தால் தலையிட வேண்டும் என்றும் திருமாவளவன் கூறினார்.
தவெகுக்கு எதிராக கொந்தளிக்க வேண்டியவர்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கவர்னரை சந்தித்து மனு கொடுப்பதை மட்டும் கடமையாக செய்வதாகவும், கட்சியை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது எனக் கூறி எதிர்க்கும் குரல் எழவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குதிரை பேரம் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் கட்சிகளின் தலைமைத்துவத்திடமே நேரடியாக கேள்வி எழுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தவெக தொடர்புடையதாக இருந்தால் தவெக தலைமையிடமும், திமுக தொடர்புடையதாக இருந்தால் திமுக தலைமையிடமும் கேட்க வேண்டும்; இடையில் உள்ளவர்களிடம் கேட்பதால் எந்த பயனும் இல்லை என்றார்.





