தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான சாலை தேவைகளை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை “மாஸ்டர் பிளான்” தயாரிக்கப்படும் என அரசின் செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “வெற்றித் தமிழகம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் அடுத்த ஐந்து ஆண்டுக்கான இலக்குகளை முன்வைக்கிறது. திட்டங்கள் முதலாண்டு, முதலாண்டு முதல் மூன்றாண்டு வரை, மூன்றாண்டு முதல் ஐந்தாண்டு வரை என மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

வரும் பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக துறை வாரியாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள பணிகள் மற்றும் அடுத்தடுத்த முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது. சமீபத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான ஆய்வு கூட்டமும் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பை மேம்படுத்த “பாதுகாப்பான சாலைகள் இயக்கம்” என்ற திட்டத்தின் கீழ் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் அமைப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்றும், அவசர கால சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் “நம்ம சாலை” செயலி மேம்படுத்தப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சாலைகளில் உள்ள பள்ளங்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலை பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும் என அறிக்கை தெரிவிக்கிறது. சென்னை–கன்னியாகுமரி எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்றும், சென்னையின் நான்கு முக்கிய நுழைவு–வெளியேறும் சாலைகளில் நெரிசலை குறைக்கும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளுக்கு அப்பாற்பட்ட திட்டங்களாக, முதலாண்டில் ராமேஸ்வரம் தீவைச் சுற்றி கடலோர படகு சேவை, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்காக மூன்று புதிய பயணிகள் படகுகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ரூ.1,07,487 கோடிக்கு மாநில கடல்சார் நீர்வழி மாஸ்டர் திட்டத்தை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிப்பது, நாகப்பட்டினம்–கொழும்பு, நாகப்பட்டினம்–கோலாலம்பூர், ராமேஸ்வரம்–தலைமன்னார் போன்ற பயணியர் சேவைகளுக்கான ஏற்பாடுகள், துறைமுக மேம்பாடு மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகள், மேலும் சில நகரங்களில் விரைவு சாலை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாலை மேம்பாடுகள் ஆகியதும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.