புதுடில்லி: அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை பணம் திருடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) வலியுறுத்தியுள்ளது.

வி.எச்.பி. அமைப்பின் சர்வதேச தலைவர் அலோக் குமார், அயோத்தி டி.எஸ்.பி. அசுதோஷ் திவாரிக்கு எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோர் பொது வெளியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கூறும் தகவல்களுக்கு என்ன ஆதாரம், அந்த விவரங்களை எங்கிருந்து பெற்றனர் என்பதையும் விசாரிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

அவர்கள் வழங்கும் ஆதாரங்கள் உண்மையானவை என்றால் அது விசாரணைக்கு உதவும் என்றும், ஆதாரமின்றி திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுகள் கூறியிருப்பது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாடு முழுவதும் கவனம் பெற்ற நிலையில், சிறப்பு புலனாய்வு குழு எட்டு பேரை கைது செய்துள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவும் அயோத்தி போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கோவில் நிர்வாகத்தை கவனித்து வரும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காணிக்கை முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்வதாக சம்பத் ராய் கடிதம் அளித்துள்ளதுடன், அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்வதாக அனில் மிஸ்ராவும் கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது; இருவரின் ராஜினாமா குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.