தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக முதல்வர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
பட்ஜெட் விவாதம் முடிந்த பின் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் நடைமுறையை முன்னிட்டு, முதல்வர் துறை வாரியாக ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்கள் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை கூட்டுறவு, உணவு, வருவாய், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டங்கள் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய உயர்கல்வித்துறை கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ஜூலை 22ம் தேதி வரை நடைபெறும் ஆய்வு கூட்டங்களில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு குறுகிய கால அவகாசம் உள்ளதால், கூட்டத்தில் பங்கேற்கும் துறை செயலர்கள் அடுத்த இரண்டு நாட்களில் புதிய திட்டங்கள் குறித்த அறிக்கையை தயாரித்து நிதித்துறை ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




