தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) நடத்திய திடீர் சோதனைகளில் ரூ.57.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அரசு அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் என 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூலை 3-ம் தேதி நடைபெற்ற இந்த சோதனைகள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்கள் உள்ளிட்ட 41 இடங்களில் நடந்ததாக DVAC கூறியது. திருவண்ணாமலை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

சொத்து வரி விதித்தல், நகர நில அளவை, கட்டட அனுமதி, வரைபட ஒப்புதல், ஒப்பந்ததாரர்களுக்கு பணி நிறைவு சான்று வழங்குதல் போன்ற பணிகளுக்காக நேரடியாகவும் இடைத்தரகர்கள் மூலமாகவும் லஞ்சம் வாங்கப்பட்டதாக சோதனையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் கூறினர். மேலும் ‘கூகுள் பே’ வழியாக ரூ.26.70 லட்சம் லஞ்சமாக பெறப்பட்டதும் கண்டறியப்பட்டதாக தெரிவித்தனர்.

சோதனையில் பணம் கோப்புகளுக்கிடையே, பீரோ உள்ளிட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், சிலர் பேன்ட் பாக்கெட்டில் பணம் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. கழிப்பறை மற்றும் கூட்டரங்கில் உள்ள தனி அறைகளிலும் பணம் பதுக்கப்பட்டிருந்ததாக DVAC தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட பணம் குறித்து கேட்டபோது தகுந்த காரணங்களை சொல்ல முடியாமல் முரணான பதில்கள் அளித்ததாகவும், சில தனிநபர்கள் விசாரணையில் லஞ்சம் கொடுத்ததை கூறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக DVAC கூறியது.