வாஷிங்டன்: 2026 உலகக் கோப்பை கால்பந்தின் ரவுண்ட்-16 நாக்-அவுட் போட்டியில், ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை நார்வே 2-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்தது.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், முடிவில் கோல் இல்லாமல் சமநிலையில் முடிந்தது.

இரண்டாம் பாதியில் ஆட்டம் வேகம் பிடித்த நிலையில், நார்வேயின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலண்ட் இறுதிக்கட்டத்தில் ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார். 79-வது நிமிடத்தில் ஆண்ட்ரியாஸ் ஸ்க்செல்டெரப் வழங்கிய பாஸை கோலாக மாற்றி நார்வேக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

90-வது நிமிடத்தில் ஹாலண்ட் மீண்டும் கோல் அடித்து 2-0 என முன்னிலை உயர்த்தினார்; இது இந்த தொடரில் அவரது 7-வது கோலாகும். 90+10-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை நெய்மர் கோலாக்கி பிரேசில் ஒரு கோல் குறைத்தாலும், இறுதியில் நார்வே 2-1 என வெற்றி பெற்று பிரேசிலை நாக்-அவுட் சுற்றிலேயே வெளியேற்றியது.