ஜூலை 6 முதல் 11 வரை இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் வெளிநாட்டு பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தா வந்தடைந்தார்.
ஜகார்த்தா விமான நிலையத்தில் இந்தோனேஷிய அதிபர் பிரபோவ் சுபியான்டோ நேரில் வந்து பிரதமரை வரவேற்றார். தொடர்ந்து அரசு முறைப்படியான வரவேற்பு நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில், அவர்களை அதிபர் பிரதமரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
வரவேற்பின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளை பிரதமர் பார்வையிட்டு கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தில் அதிபர் நேரில் வரவேற்றது நெகிழ்ச்சியளித்ததாக மோடி தெரிவித்தார். 2018-ல் இரு நாடுகளின் உறவுகள் “விரிவான உத்திசார் கூட்டாண்மை” நிலைக்கு உயர்த்தப்பட்டதாகவும், அது இரு நாடுகளின் மக்களுக்கு பயன் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பயணத்தின் போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதிபர் பிரபோவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக மோடி கூறினார். மேலும் யோக்யகார்த்தாவில் உள்ள பிரம்பனன் கோவிலுக்கு இருவரும் செல்ல உள்ளதாகவும், இது இரு நாடுகளின் நெருங்கிய கலாசார தொடர்புகளை உறுதிப்படுத்தும் என்றும் தெரிவித்தார். இந்தோனேஷியாவில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாட ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார். இந்தோனேஷியா பயணத்தை முடித்த பின் அவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கும் செல்ல உள்ளார்.




