புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை குற்றவாளியாக சேர்த்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 அன்று நடந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பின்னர் பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

விசாரணைகள் முடிவடைந்த நிலையில், கடந்த டிசம்பரில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் ஜாட் முக்கிய சதிகாரராக குறிப்பிடப்பட்டிருந்தார்.

இப்போது தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில், தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் அதன் சார்பு அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் ஆகியவற்றின் தலைவனாக இருந்ததாகவும், இந்தியாவிற்கு எதிராகப் போர் தொடுத்து எல்லை தாண்டி சதித்திட்டம் தீட்டியதாகவும் ஹபீஸ் சயீத் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.