லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியதாக கூறப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியை, விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவின் கோரிக்கையின்பேரில் சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் உதவியுடன் லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, தற்போது பிரிட்டன் சிறையில் உள்ளார். அவரை நாடு கடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.
முன்னதாக பிரிட்டன் நீதிமன்றம் நாடு கடத்த உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து நீரவ் மோடி தாக்கல் செய்த மேல்முறையீடுகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமீன் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன.
கடைசி முயற்சியாக, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் தன்னை சித்திரவதை செய்யக்கூடும் எனக் கூறி கடந்த ஏப்ரலில் லண்டனில் உள்ள ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவரது சட்ட முயற்சிகள் அனைத்தும் முடங்கிய நிலையில், நாடு கடத்தல் உத்தரவை அமல்படுத்த பிரிட்டன் அரசு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாகவும், எந்த நேரத்திலும் இந்திய அதிகாரிகளிடம் அவரை ஒப்படைக்கலாம் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.




