சென்னை: ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் தெலுங்கு திரைப்படம் முருகக் கடவுளின் வரலாற்றை திரித்து கூறுவதாக, நாம் தமிழர் கட்சி (நாம் தமிழர்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், முருகனை மையமாகக் கொண்டு ஆந்திராவில் தயாராகும் இப்படத்தில், “முருகன் வடபுலத்தில் பிறந்தவர்” என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் பதிவுகள் வருவது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.

‘கலைப்படைப்பு’ என்ற பெயரில் அடிப்படை புரிதலின்றி வரலாற்று திரிபுகளை உண்மையென கட்டமைக்க முயல்வது கண்டனத்துக்குரியது என்றும், தமிழர்கள் வழிபடும் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை உள்ளிட்ட தெய்வங்களை பிறர் தங்களுடையதாக சேர்த்துக் கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முருகனை தமிழினம் இழக்க விடமாட்டோம்; “தமிழ் தான் முருகன்; முருகன் தான் தமிழ்” என வலியுறுத்திய சீமான், இப்படக்குழு இத்தகைய கருத்துகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதே கருத்துடன் படம் வெளியானால் தமிழகத்தில் திரையிட விடாமல் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும், சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.