சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்க சதி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
தவெக எம்எல்ஏக்களை பணம் கொடுத்து இழுக்க முயன்றதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடங்கியது. அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர் விசாரணையில், இந்த சதி பின்னணியில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததாக போலீசார் கூறினர். செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் இருவருக்கும் சம்மன் வழங்கியிருந்தனர். ஆனால் இருவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.




