கொழும்பு: இலங்கையின் கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே வெடித்த வன்முறையில் 4 போலீஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரு கைதி குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்ததையடுத்து, பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஜூலை 06 அன்று இரண்டாவது நாளாகவும் மோதல் போக்கு நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களாக தொடரும் பதற்றத்தால் சிறைத்துறை அதிகாரிகள் அமைதியை நிலைநாட்ட முயன்று வருகின்றனர். சிறை வளாகத்திற்குள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, சிறைக்குள் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவளிப்பதாக கூறப்படும் ஒரு குழுவுக்கும், அதனை எதிர்க்கும் மற்றொரு குழுவுக்கும் இடையிலான முரண்பாடே இந்த வன்முறைக்கு காரணமாக இருக்கலாம். நிலைமையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மூன்று கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.