சீன அரசு எந்த நிபந்தனையும் இன்றி நிறுவனங்களுக்கு பணத்தை வாரி வழங்கியதால் தான் உலக சந்தையை சீன நிறுவனங்கள் கைப்பற்றின என்ற நம்பிக்கை இந்தியாவில் பரவலாக உள்ளது. ஆனால் சீனாவின் உண்மையான அனுபவத்தை ஆய்வுகள் வேறுபடையாக காட்டுகின்றன; அரசு ஆதரவு என்பது ஆண்டுதோறும் உயர்த்தப்படும் தொழில்நுட்ப தரநிலைகள், ஆராய்ச்சி முதலீடு மற்றும் செயல்திறன் போன்ற அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டால் தான் நீடித்த பலன் தரும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2001ல் உலக வர்த்தக அமைப்பில் இணைந்த பின் சீனா தொழில் துறைக்கு பெரிய அளவில் மானியங்களை வழங்கியது. மலிவான நிலம், குறைந்த கட்டண மின்சாரம், அரசின் வளர்ச்சி வங்கிகளில் எளிய கடன்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 2010–2012 காலத்தில் மட்டும் சீன வளர்ச்சி வங்கி 15 சூரிய மின்சக்தி நிறுவனங்களுக்கு சுமார் 4,300 கோடி அமெரிக்க டாலர் கடன் வழங்கியதாகவும், இதில் எல்.டி.கே. சோலார் மற்றும் சன்டெக் போன்ற நிறுவனங்களுக்கு பெரிய தொகைகள் சென்றதாகவும் கட்டுரை குறிப்பிடுகிறது.

ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு அல்லது செயல்திறன் தொடர்பான தெளிவான நிபந்தனைகள் இல்லாமல் வழங்கப்பட்ட இந்த ஆதரவு பல பிரச்னைகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் உலகின் முன்னணி சூரிய மின்சக்தி உற்பத்தியாளராக இருந்த சன்டெக் நிறுவனம் 2013ல் திவாலானது; அதன் பின்னர் எல்.டி.கே. சோலார் நிறுவனமும் வீழ்ச்சியடைந்தது.

மின்சார பேருந்துகளுக்கான மானிய திட்டத்திலும் மோசடிகள் நடந்ததாக கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. பேருந்தின் நீளம் மற்றும் அறிவிக்கப்பட்ட பேட்டரி திறன் அடிப்படையில் மானியம் வழங்கப்பட்டதால், தரமற்ற பேட்டரிகளை பொருத்தி அதிக மானியம் பெற்றதும், இல்லாத பேருந்துகளுக்கே மானியம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது; சில நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

2016ல் சீன நிதி அமைச்சர் லுா ஜிவெய், நீண்டகால மானியங்கள் நிறுவனங்களை அரசின் உதவியை மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளி புதுமை ஊக்கத்தை குறைக்கும் என எச்சரித்தார். அதன் பின்னர் சீனா மானிய முறையை மாற்றி, மின்சார வாகன மானியங்களை பேட்டரியின் ஆற்றல் அடர்த்தி, மின்சார நுகர்வு திறன், உண்மையான பயன்பாடு, நேரடி கண்காணிப்பு, மோசடி கண்டால் மானியத்தை திரும்பப் பெறுதல் போன்ற கடுமையான நிபந்தனைகளுடன் இணைத்தது; இதனால் மானியம் பெறும் வாகன மாதிரிகள் 2017ல் இருந்த 3,400 இலிருந்து 2019ல் 1,500 ஆக குறைந்தன. ஆராய்ச்சிக்கான செலவு குறைவாக உள்ள இந்தியா, திறந்த முடிவில்லா மானியங்களை விட அளவிடக்கூடிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் மானியங்களை இணைப்பதே பாடம் என கட்டுரை வலியுறுத்துகிறது.