கடந்த தேர்தலில் திமுகவின் “உண்மையான எதிரி” யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை; ஆனால் தற்போது அது புரிந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சனிக்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுவதும் சேவை செய்வதுமே கட்சியின் முக்கியக் கடமை என்றார். வெற்றியும் தோல்வியும் திமுக பார்த்துள்ளதாகவும், மக்களுடன் நிற்பவர்களே கருணாநிதியின் தொண்டர்கள் என்றும் குறிப்பிட்டார்.

அதிமுக இரண்டாக உடைக்கப்பட்டதாகக் கூறிய அவர், திமுகவை “தொட்டு பார்க்க முடியாது” என்றார். மேலும், ஆளுங்கட்சியை விட திமுக எதிர்க்கட்சியாகச் சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.

ஆளுங்கட்சியை விமர்சித்த அவர், “ரீல்ஸ்” மூலம் ஆட்சிக்கு வந்ததாகவும் அதே முறையில் ஆட்சி நடத்த நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார். எம்எல்ஏக்கள் முதல் முதல்வர் வரை அனைவரும் ரீல்ஸ் எடுக்கிறார்கள் என்றும் கூறினார். அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திமுக முயன்றதாகவும் அரசு கவிழ்க்க முயல்வதாகவும் வரும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அரசை அகற்றுவது மக்களே என்று தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் தெருத் தெருவாகவும் மாவட்டம் மாவட்டமாகவும் சென்று ஓட்டுகள் சேகரித்தோம்; ஆனால் “நமது வீட்டில் ஓட்டு சேகரிக்க மறந்துவிட்டோம்” எனவும் அவர் கூறினார். இனி உண்மையான எதிரி யார் என்பது தெரிந்துவிட்டதால் அடுத்த முறை அவர்களை அகற்றுவோம் என்றார். மிரட்டல், அச்சுறுத்தல்களுக்கு திமுக பயப்படாது என்றும், “சோபா மாடல்” என அவர் குறிப்பிட்ட ஆட்சியின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்றும் தெரிவித்தார்.