வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டமாக குறிப்பிடப்படும் ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ திட்டத்தை செயல்படுத்த, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முதல் தவணையாக ரூ.25,863 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதி விடுவிப்பில் தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி, புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2006-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (100 நாட்கள் வேலை) மத்திய அரசின் முழு நிதியுடன் செயல்பட்டது. அதற்கு மாற்றாக கடந்த ஆண்டு மத்திய அரசு ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ திட்டத்தை அறிமுகப்படுத்தி, வேலை நாட்களை 100-இலிருந்து 125 நாட்களாக உயர்த்தியுள்ளது.

மேலும் நிதி பங்கீடு முறையும் மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு 60% வழங்கும் நிலையில், மாநில அரசுகள் 40% வழங்க வேண்டும். குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய திட்டத்தின் கீழ் ஊதியம் 10% வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கான சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஜனாதிபதி ஒப்புதலும் பெற்றது. மத்திய அரசு அறிவித்தபடி, ஜூலை 1 முதல் நாடு முழுவதும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்துக்கான முதல் தவணை நிதி விடுவிக்கப்பட்டதாகவும், திட்ட மாற்றம் சுமுகமாக நடந்துள்ளதாகவும், ஊதியங்களை நேரத்தில் வழங்க மத்திய–மாநில அரசுகள் தங்களின் பங்கினை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.