கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கலவரங்களின்போது அரசு அல்லது தனியார் சொத்துகளை சேதப்படுத்துவோரிடம், சேதத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று முதல்வர் சுவேந்து அதிகாரி எச்சரித்துள்ளார். இது மாநிலத்தில் அமலுக்கு வந்த புதிய சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார்.
சுவேந்து அதிகாரி தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற பா.ஜ. அரசு, சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 28-ஆம் தேதி மாநில சட்டசபையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், பொது அமைதியை காக்கவும் திட்டமிட்ட சதிகளை முறியடிக்கவும் அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அவை கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது தொகுதியான பவானிபூரில் தொழிற்துறையினர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேசினார். போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை இருப்பினும், அது வன்முறையாக மாறி தொழிற்சாலைகளின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நிலைக்கு செல்லக் கூடாது என்றும், தொழில் நிறுவனங்களை மூட வைப்பதையோ சேதப்படுத்துவதையோ அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
அரசு மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்துவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு சேதம் ஏற்பட்டால், அதற்குக் காரணமானவர்கள் மூன்று கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற உதாரணத்தையும் முன்வைத்தார்.
அபராதத் தொகையை செலுத்த மறுத்தால், சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை ஏலம் வைத்து அரசு வசூலிக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், வெளிநாட்டு பல்கலைகள் தரமான திட்டங்களுடன் முன்வந்தால், அவற்றை மாநிலத்தில் அமைக்க அரசு தயாராக இருப்பதாகவும் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.





