சென்னையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அ.ம.மு.க. பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நேரடியாக முன்வைக்கப்பட்டதால், கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் தோல்வி, இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கும்பகோணம் பகுதி செயலர் பத்ம குமரேசன், டெல்டா மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த தினகரனை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்றும், பிரிவு நீடிப்பதால் பிற கட்சிகள் லாபம் அடைகின்றன என்றும் கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பழனிசாமி, தினகரன் தற்போது ‘அ.ம.மு.க.’ என்ற தனிக் கட்சியை நடத்தி வருவதால் அவரை எப்படி அ.தி.மு.க.வில் இணைக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், தினகரன் கட்சி கூட்டணியில் இருப்பதால், இரு கட்சிகளின் நிர்வாகிகள் இணைந்து பணியாற்றினாலே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியும் என கூறி நிலைமையை சமாளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சில நிர்வாகிகள், பழனிசாமியிடமிருந்து கட்சியை பறிக்க பல தரப்புகள் முயற்சிப்பதாகவும், இதற்கிடையில் டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க.–அ.ம.மு.க. இணைப்பு குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கியிருப்பது தலைமைக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.





