சென்னை: ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலைக்கு, தமிழக பாஜ தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு தலைவர் அர்ஜுன மூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். சமூக ஊடகங்களில் தங்களை ஆதரிப்பதாக கூறுபவர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடிதத்தில், தங்களை நேசிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் சிலர் சமூக ஊடகங்களை தனிநபர் தாக்குதல்களின் போர்க்களமாக மாற்றி வருவது கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார். பிற தலைவர்களை அவமதிப்பது, பெண்களை இழிவுபடுத்துவது, தரக்குறைவான சொற்களால் தாக்குவது போன்றவை நாகரிக சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு தலைமையை உயர்த்த மற்றொரு தலைவரை இழிவுபடுத்த வேண்டிய அவசியம் ஜனநாயகத்தில் இல்லை என வலியுறுத்திய அவர், பெண்கள் மற்றும் மூத்த தலைவர்களை கேவலமாக சித்தரிக்கும் படங்கள், படிக்கவே கூச்சப்பட வேண்டிய மொழி ஆகியவை அரசியல் வெளிப்பாடாக சாதாரணமாகி வருவது குறித்து கவலை தெரிவித்தார்.
கருத்தை எதிர்க்கலாம்; மனிதனை அல்ல. விமர்சிக்கலாம்; அவமதிக்கக் கூடாது. வாதிடலாம்; வெறுப்பை விதைக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டி, தங்களை நம்பி பயணிப்பவர்களிடம் இதை தெளிவாக சொல்ல வேண்டும் என்றார். இது ஒரு வேண்டுகோள் மட்டுமல்ல, பொறுப்புணர்வின் முறையீடு என்றும், நாட்டை மாற்ற விரும்பும் தலைமை முதலில் பின்பற்றுவோரின் அரசியல் பண்பாட்டை மாற்ற வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.




