சென்னையில் மதுபானங்களை நினைவூட்டும் மணம் மற்றும் சுவையுடன் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. இவ்வகை தயாரிப்புகள் குழந்தைகள், சிறார்கள் மற்றும் இளம் பருவத்தினரிடம் மதுபான ருசியை “சாதாரணமாக்கி” விடுமோ என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மேற்கு அண்ணா நகர், வெல்கம் காலனியில் ‘ஐ சாண்டி நேச்சுரல்’ என்ற பெயரில் இயங்கும் கடையில், ஒயின், வோட்கா, விஸ்கி போன்ற பெயர்களில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இவை சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரால் வாங்கி சாப்பிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இணைய விளம்பரங்கள் வெளியானதைத் தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழு அண்ணா நகர் கடையில் சோதனை நடத்தியது. சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு ஐஸ்கிரீம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், சோதனையில் ஐஸ்கிரீமில் நேரடியாக ஆல்கஹால் கலக்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்றனர். மதுபான மணம்-சுவையை உருவாக்க எசன்ஸ் மற்றும் பிளேவர் திரவங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், ஆய்வக முடிவுகள் வந்த பிறகே இறுதி தகவல் தெரிய வரும் என்றும் தெரிவித்தனர்.
கடையின் உரிமையாளர் சந்தோஷ் கூறுகையில், அண்ணா நகர் கிளையில் தயாரிப்பு நடைபெறாது; நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்திலிருந்து தயாரிப்புகள் நேரடியாக வருவதாக தெரிவித்தார். மதுபான பெயர்களில் விற்கப்படும் சில வகைகளில் ஆல்கஹால் கலப்பு இல்லை என்றும், விளம்பரத்தில் மதுபானத்தை நேரடியாக காட்டியதால் தவறான புரிதல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.





