மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நபர்களின் விவரங்களை தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்தபோது, கோவில் மற்றும் உபகோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கவும், புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

கோவில் தரப்பில், மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மொத்தம் 1,233.98 ஏக்கர் நிலம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 133 பிளாட்கள், 108 கடைகள், மதுரை எழுகடல் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளும் உள்ளன என கூறப்பட்டது.

செல்லூரில் 8.37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு ஏக்கரில் உள்ளவர்கள் வாடகைதாரர்களாக தொடர சம்மதித்துள்ளதாகவும், மற்றவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் தரப்பு தெரிவித்தது.

நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு, தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபம் புனரமைப்பு எப்போது முடியும் என்பதையும், பிரசாதம் தயாரிக்கும் சமையல் கூடத்தை நவீன முறையில் அமைக்கும் வகையில் அது எப்போது வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்பதையும் கேட்டு விளக்கம் கோரியது. மேலும், கோவில் சொத்துகளை ஆக்கிரமித்தவர்களின் பெயர், முகவரி மற்றும் எந்த நோக்கத்திற்காக ஆக்கிரமித்துள்ளனர் என்ற விவரங்களை ஜூலை 20 அன்று அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.