இந்தோனேஷியாவில் பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம் பெங்களூரு) வளாகம் அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அறிவித்தார்.
ஜகார்த்தாவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடி, இந்தோனேஷிய அதிபர் பிரபோவ் சுபியான்டோவை சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு இளைஞர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். மேலும், ஸ்டார்ட் அப் சூழலமைப்பில் புரிந்துணர்வை ஆழப்படுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் வெளிநாட்டில் வளாகம் அமைக்கும் இரண்டாவது ஐஐஎம் என்ற பெருமை ஐஐஎம் பெங்களூருவுக்கு கிடைக்கிறது. இதற்கு முன் ஐஐஎம் ஆமதாபாத் துபாயில் வளாகம் ஒன்றை தொடங்கியுள்ளது.
மேலும், சென்னை ஐஐடி தான்சானியாவிலும் டில்லி ஐஐடி அபுதாபியிலும் வளாகங்களை திறந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.





