இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் நரேந்திர மோடியின் பணியை கூர்ந்து கவனித்து வருவதாகவும், அவரது பல திட்டங்களை தாம் பின்பற்றுவதாகவும் வெளிப்படையாக பாராட்டினார்.

இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடிக்கு ஜகார்த்தாவில் அளிக்கப்பட்ட மதிய விருந்தின்போது பேசிய பிரபோவோ, இதை ஒப்புக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை என்றார். மோடியின் திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியா பல முன்னேற்றங்களை எட்டியுள்ளதாக கூறிய அவர், அதேபோன்ற திட்டங்களை இந்தோனேசியாவில் செயல்படுத்துவதும் வெற்றிகரமாக அமைகிறது என்றார். எந்தத் திட்டத்திற்கும் “காப்புரிமை” இல்லை என்பதில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், மோடியையும் அவரது குழுவினரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி என்றும், இந்த வருகை இருநாட்டு உறவில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் கூறினார்.

மேலும் இருநாடுகளுக்கிடையேயான பண்பாட்டு தொடர்புகளை சுட்டிக்காட்டிய பிரபோவோ, இந்தோனேசிய மொழியில் 30–40 சதவீதம் வரை சமஸ்கிருதச் சொற்கள் இருப்பதாகவும், பலரின் பெயர்கள் சமஸ்கிருத மூலமுடையவை என்றும் தெரிவித்தார். தேசியச் சின்னமான ‘கருடன்’ கூட இந்திய அல்லது ஹிந்து புராணங்கள், கலாசாரத்திலிருந்து வந்ததாக தாம் கருதுவதாக கூறிய அவர், வரலாறு இருநாடுகளையும் இணைத்துள்ளதாகவும், எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையும் இருவருக்கும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மோடியை பிரபோவோ வெளிப்படையாக பாராட்டியது ஜகார்த்தாவில் கவனம் ஈர்த்ததாகவும், காலை நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.