அண்டார்டிகாவில் கண்டெடுக்கப்பட்ட “ஆல்பா 81005” என்ற விண்கல்லின் வேதியியல் அமைப்பு, இந்தியாவின் சந்திரயான்-3 பயணத்தில் பிரக்யான் ரோவர் அளந்து அனுப்பிய நிலவின் மண் வேதியியல் தரவுடன் ஒத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோ வெளியிட்ட தகவலின்படி, 2023 ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அந்த இடத்திற்கு “சிவசக்தி” என பெயரிடப்பட்டது. அப்பகுதியின் மேற்பரப்பு பொருட்களை ரோபோட்டிக் முறையில் ஆய்வு செய்ய “ஆல்பா துகள் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது.

நிலவிலிருந்து வந்த அளவீட்டு தகவல்கள் ஆமதாபாதில் உள்ள இயற்பியல் ஆய்வகத்தில் விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டன. அதன் முடிவுகள், முன்பே அண்டார்டிகாவின் ஆலன் ஹில்ஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட “ஆல்பா 81005” விண்கல்லின் அறியப்பட்ட வேதியியல் கையொப்பத்துடன் ஒத்ததாக இருப்பதாக இஸ்ரோ கூறியது.

ரோவர் இறங்கிய இடத்தின் மண்ணடுக்கில் மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், இரும்பு உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதாகவும், இது நிலவின் உயரமான பகுதிகளில் கிடைத்த மாதிரிகளிலிருந்து மாறுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக அங்கு அலுமினியம் குறைவாகவும், இரும்பு மற்றும் மெக்னீசியம் அதிகமாகவும் இருந்தது; இதே போன்று “ஆல்பா 81005” விண்கல்லிலும் காணப்படுவதாக கூறப்பட்டது.

இந்த ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு மோதலால் நிலவின் ஆழமான பகுதியில் இருந்து அந்தப் பாறை தள்ளப்பட்டு, பின்னர் பூமியை வந்தடைந்திருக்கலாம் என இஸ்ரோ கருதுகிறது.