மஹாராஷ்டிரா நாசிக் மாவட்டத்தில், தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்ததாக கூறப்படும் புகாரில் கைது செய்யப்பட்ட பெண் ஊழியருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
நாசிக்கில் செயல்படும் பிரபல தனியார் ஐ.டி. நிறுவன கிளையில் பணியாற்றிய சில ஊழியர்கள், தங்களை முஸ்லிம் மதத்துக்கு கட்டாயமாக மாற்ற முயற்சி செய்யப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை நடந்ததாகவும் சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் நாசிக் போலீசார் வழக்கு பதிவு செய்து, நிறுவனத்துடன் தொடர்புடைய எட்டுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் நிறுவன மனிதவளத் துறை மேலாளர் நிடா கான் என்பவரை, இரு மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமின் கோரி நிடா கான் நாசிக் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கூடுதல் அமர்வு நீதிபதி கே.ஜி. ஜோஷி முன் நடந்த விசாரணையில், நிடா கான் கர்ப்பமாக இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதை ஏற்று நீதிபதி ஜாமின் வழங்கினார்.
அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டேனிஷ் ஷேக் என்பவரின் ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.





