கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என திமுக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் 2025 செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் உள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ பலமுறை விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த இடைக்கால மனுவில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கின் தன்மையை பாதிக்கும் வகையில் பொதுவெளியில் அவதூறான கருத்துகளை தொடர்ந்து கூறி வருவதாகவும், அது சாட்சிகளை அச்சுறுத்தும் நிலையை உருவாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கலாம் என்ற தகவலையும் சுட்டிக்காட்டி, இது சிபிஐயின் நடுநிலை விசாரணைக்கு இடையூறு என மனுவில் வாதிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிபதி அசானுதீன் அமானுல்லா தலைமையிலான விடுமுறை கால சிறப்பு அமர்வில் திமுக தரப்பு முறையிட்டது. கட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசீபா அகமதி, விசாரணை வளையத்தில் உள்ள அமைச்சர் பொதுக் கருத்துகள் மூலம் சாட்சிகளுக்கு தாக்கம் ஏற்படுத்த முயல்வது விசாரணையை பாதிக்கும் என வாதிட்டதைத் தொடர்ந்து, அமர்வு மனுவை இன்று விசாரிப்பதாக அறிவித்தது.