த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க முயன்றதாக கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் மற்றும் கோவை தெற்கு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் அவர் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா (46) கடந்த ஜூன் 29 அன்று அளித்த புகாரைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் வரும்போது கட்சி கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களிக்கச் சொல்லி, ஒரே தவணையில் ரூ.35 கோடி தருவதாக கூறியதாக அவர் புகாரில் தெரிவித்தார். இதற்கு உடன்படாததால், குடும்பத்துடன் உயிருக்கு ஆபத்து என மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு உட்பட ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். தொடர் விசாரணையில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக தகவல் கிடைத்ததாக போலீசார் கூறினர்.
இந்த விவகாரத்தின் முக்கிய சூத்திரதாரிகளாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் இருப்பதாக தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருவரையும் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. மேலும், வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்க நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
கரூர் அருகே உள்ள பூர்வீக வீட்டில் வசிக்கும் அவர்களின் பெற்றோரிடம் வழக்கு விவரங்களை தெரிவித்து, ஜூலை 6 காலை 10.30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. மேலும் இரண்டு முறை சம்மன் அனுப்பி, அதற்குப் பிறகும் வராவிட்டால் நீதிமன்றத்தில் கைது உத்தரவு பெற்று நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மதுரையில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசின் ஓட்டுநர் கிருஷ்ணாவிடமிருந்து ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த பணம் எவ்வாறு வந்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. மேலும், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட எட்டு பேரில், திருநாவுக்கரசு, தியாகராஜன், ரமேஷ், நரேஷ், கார்த்திக் ஆகியோர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.





