ஐதராபாத்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் புகாரில், தெலுங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) போலீசார் டிஎஸ்பி ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் சன்கிரெட்டி பீம் ரெட்டி. இவர் ஐதராபாத்தில் உள்ள போலீஸ் கணினி சேவை பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் முறைகேடு செய்து வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஏசிபி தெரிவித்தது.

இதன் அடிப்படையில், அவருடன் தொடர்புடைய இடங்கள், பினாமி இடங்கள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 15 இடங்களில் தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ஐதராபாத் இப்ராஹிம்பாக் பகுதியில் சொகுசு குடியிருப்பு, டெலிகாம் நகரில் குடியிருப்பு மற்றும் பிளாட், கச்சிபவுலியில் அடுக்குமாடி குடியிருப்பு, மணிகொண்டாவில் வணிக வளாகம் தொடர்பான இடம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தேலாப்பூரில் இரண்டு குடியிருப்புகள், பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் முதலீட்டு ஆவணங்கள் உள்ளிட்டவை இருப்பதாக ஏசிபி தெரிவித்தது. மொத்தமாக ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து ரூ.3.60 லட்சம் ரொக்கம், பினாமி வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் பல சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட டிஎஸ்பியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக ஏசிபி தெரிவித்தது.