தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, அழகிரி, செல்லக்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஊழல் வழக்குகளில் சிக்கியதாக குற்றச்சாட்டு உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவெகவில் இணைந்ததை காங்கிரஸ் வெளிப்படையாக எதிர்த்திருக்க வேண்டும் என கருத்து முன்வைக்கப்பட்டது. முன்னாள் மாநில தலைவர்கள் திருநாவுக்கரசர், செல்வப்பெருந்தகை இந்த விவகாரத்தை எடுத்துரைத்த நிலையில், அவர்களின் கருத்துக்கு ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது.

மேலும், காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் பேசுகையில், கட்சியின் சட்டமன்ற அணியில் பொறுப்புகளை பகிர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். “ஒருவருக்கு ஒரு பதவி” என்ற அடிப்படையில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியும் அமைச்சர் பதவியும் ஒரே நபரிடம் இருப்பதால், மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிகளை எதிர்த்து தமிழக காங்கிரஸ் குரல் கொடுத்து போராட்டம் நடத்தப்படும் என்பதும் இடம்பெற்றது. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு காரைக்குடி செட்டிநாடு அசைவ உணவு விருந்தும் வழங்கப்பட்டது.