திமுக ஆட்சிக்காலத்தில் மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு வெளியிடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய பஸ்கள் வாங்குதல், பல்வேறு உபகரணங்கள் கொள்முதல், மினி பஸ்களுக்கு கூடு கட்டும் பணிகள் உள்ளிட்டவை தொடர்பான டெண்டர்கள் முந்தைய காலத்தில் வெளியிடப்பட்டிருந்தன. டெண்டர் நடைமுறைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் போக்குவரத்துக் கழகங்களுக்கு 60,000 டயர்கள் வாங்குவதற்கான டெண்டரும் அடங்கும். மேலும் பஸ்களில் இருப்பிடத்தை அறியும் கருவி (GPS) மற்றும் அவசர கால பொத்தான் (Panic Button) பொருத்துவதற்காக கோரப்பட்ட டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெண்டர்களில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதாலேயே ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் புதிய டெண்டர்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.