சென்னை: தமிழக வெற்றி கழகத்தில் (த.வெ.க.) சமீபத்தில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு மண்டல பொறுப்புகள் வழங்கும் திட்டம் குறித்து கட்சிக்குள் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
கட்சி வட்டார தகவலின்படி, சி.விஜயபாஸ்கருக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பொறுப்பாளர் பதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெறுகின்றன.
இந்த முடிவுக்கு கட்சி தலைவர் விஜய் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கட்சியில் புதிதாக சேர்ந்த இருவருக்கும் பெரிய பொறுப்புகளை வழங்குவது சரியா என்ற கேள்வியுடன் பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
த.வெ.க. வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பணபலம், அமைப்பு வலிமை போன்ற காரணங்களை முன்னிட்டு இந்த நியமனங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஆனால், தேர்தல் பணிகளில் உழைத்தவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என சில நிர்வாகிகள் வலியுறுத்தி, மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட சிலரும் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. மீறி நியமனம் நடந்தால் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை வந்ததால், மண்டல பொறுப்பாளர் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





