மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசே ‘முக்கிய வில்லன்’ என ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டினார். காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கர்நாடகாவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் 25 மாவட்டங்களில் குடிநீருக்கு கடுமையான பிரச்னை உருவாகும் என அவர் எச்சரித்தார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினார்.

காவிரி போன்ற மாநிலங்களுக்கு இடையிலான நீர்விவகாரத்தில் இத்தகைய அனுமதி இந்திய ஒருமைப்பாட்டையே பாதிக்கும் என்றும் வைகோ தெரிவித்தார்.

அதே நேரத்தில், சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார். 1960-ல் தவறான ஆலோசனையால் தென் ஆப்ரிக்கா மற்றும் நைஜீரியாவிலிருந்து விதைகள் கொண்டு வந்து இங்கு விதைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் அவற்றை அகற்றியதாகவும் வைகோ தெரிவித்தார். அவற்றை முழுமையாக அகற்ற தமிழக அரசுக்கு நீதிமன்றம் 19 உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.