சென்னை: முந்தைய ஆட்சிக் காலங்களில் கருங்கல் மற்றும் மணல் குவாரிகளில் நடந்ததாக கூறப்படும் விதிமீறல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கனிம வளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
விதிகளை மீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கைகள் தயாரித்ததாகவும், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பல இடங்களில் அந்த அபராதத் தொகை வசூலிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அபராதத் தொகை தொடர்பான விவரங்கள் உயரதிகாரிகள் ஆய்வுக்கு சென்றுள்ளன. சில இடங்களில் அரசியல் தலையீட்டால் அபராதம் பெரிதும் குறைக்கப்பட்டு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ஆய்வில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
அபராதக் குறைப்பு மட்டுமல்லாமல், அளவுக்கு அதிகமாக கனிமங்கள் எடுக்கப்பட்டதாகவும் அதனால் கூடுதல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் துறை ஆய்வு செய்து வருகிறது. கனிமம் வாரியாகவும் மாவட்டம் வாரியாகவும் இழப்பு விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடும் பணிகள் நடைபெறுவதாகவும் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.





