ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை பதிவாகியுள்ளது. யாத்திரை தொடங்கிய முதல் ஐந்து நாட்களில் 1.13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித அமர்நாத் குகை கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.

ஜூலை 3ல் தொடங்கிய இந்த யாத்திரை ஆகஸ்ட் 28 வரை நடைபெற உள்ளது. அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் அருகே கடல் மட்டத்திலிருந்து சுமார் 12,730 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவில், இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்திற்காகப் பிரசித்தி பெற்றது.

இது குறித்து ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, யாத்திரையை பக்தர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாற்றுவதும், அவர்களுக்கு சிறந்த வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதும் நிர்வாகத்தின் இலக்கு என தெரிவித்தார்.

மேலும், அனைத்து பக்தர்களுக்கும் தடையற்ற, சீரான தரிசனம் கிடைக்க முன்னுரிமை அளித்து ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.